ஒமைக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், டெல்லியில், மகாராஷ்டிராவில், தெலங்கானாவில், கர்நாடகாவில், ராஜஸ்தானில், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக ஏற்கெனவே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், மருத்துவ வசதிகள், தடுப்பூசி நிலவரம் ஆகியவற்றை அறிய சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி, மரபணு சோதனையில் ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டதாக ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2- ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில் ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 69 பேரின் மாதிரி முடிவுகள் விரைவில் வெளிவரும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 89 பேரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் 13 பேரின் முடிவுகள் ஏற்கெனவே வந்துவிட்டதாகவும் கூறினார்.