கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெராமனிடம், தனிப்படை போலீசார் முதல் முறையாக விசாரணை நடத்தினர். அவரிடம் 3 மணி நேரத்துக்கு மேல் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோடநாடு பங்களாவில் சிசிடிவி கேமராக்களை கையாண்டு வந்த தினேஷ் தற்கொலை செய்தது மற்றும் வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தது உள்ளிட்ட மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இருந்து வருகிறது.
அண்மையில், தனிப்படை போலீசார் கோடநாடு பங்களா மேலாளர் நடராஜனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் கோவை ஏஜி அலுவலகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள் என்னென்ன, கொலை, கொள்ளை சம்பவங்களுக்குப் பின் காணாமல் போன பொருட்கள், ஆவணங்கள் எவை எவை என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இதுதொடர்பாக மேலும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முதல் முறையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.