நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே பாடத் திட்டம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே பொதுவான பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் பள்ளிகளில் பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கு தவறிவிட்ட மத்திய அரசு, 2005-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் சில பிரிவுகளைச் சோ்த்துவிட்டது.
தற்போதைய பாடத் திட்டம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் மாறுபடுகிறது. தற்போதைய கல்வி முறையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேலும், மதரஸாக்கள், வேத பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதையும் இந்தச் சட்டம் தடுக்கிறது.
குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கினால் மட்டும் போதாது. அவா்களின் சமூக, பொருளாதார பின்னணியைக் கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி வழங்கப்பட வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் 1(4), 1(5) பிரிவுகள், அரசமைப்புச் சட்டத்தின் 14,15,16,21, 21ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதுடன் அரசமைப்புச் சட்டத்தின் 38, 39 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே, நாடு முழுவதும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரே பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.