தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்: அமைச்சர் சேகர் பாபு

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி திமுக ஆட்சி அமைந்தபோதே அமைச்சரவையில் இடம்பெறுவார் என்ற பேச்சு எழுந்தது. எனினும், அவர் எம்.எல்.ஏ.வாகவே தொடர்கிறார். இதற்கிடையே, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சென்னை புனித பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, உயர்ந்தவர் தாழ்ந்தவர் இன்னார், இனியவர் என்றில்லாமல் அனைவரும் ஒன்றே. தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதம் இனங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடும் மக்கள் ஒற்றுமையோடு என்றும் வாழ விரும்பும் முதல்வர் இன்றைய தமிழக முதல்வர் என்பது நிரூபணமாகிறது. கிறிஸ்தவ பெருமக்கள் சுதந்திர தாகத்தோடு அவரவர் விரும்பும் மத வழிபாட்டிற்கு எல்லாம் வல்ல ஏசு கிறிஸ்துவோடு தமிழக முதல்வரும் உங்களுக்குச் சிறுபான்மையின மக்களுக்கு உதவியாக இருப்பார் என்று குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசும்போது, ‘உண்மையாக, இயக்கத்திற்காக, எதிர்பார்ப்பின்றி உழைப்பவர்களை உயர்த்தித் தூக்கிப் பிடிப்பவர் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் திமுக இளைஞரணிச் செயலாளர், இடைத்தேர்தல் என்றாலும் சரி, திமுக தோழர்களின் சுகதுக்க நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, திமுக நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, மக்களுக்கு உதவி புரிகின்ற நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, திமுக தோழர்களுக்கு இன்னல் எனும்போது அவர்களுக்கு உதவி புரிகின்ற நிகழ்ச்சி என்றாலும் சரி, தமிழக முதல்வரைப் போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே தமிழக முதல்வர் நிச்சயம் அதற்குண்டான அங்கீகாரத்தை வழங்குவார். மேலும் மக்கள் பணி சிறப்படைய அவரும் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று கூறினார்.