நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? பிரதமர் இன்று மாலை முக்கிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவல், ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலகம் முழுவதிலும் 89 நாடுகளுக்கு பரவியுள்ள ஒமைக்ரான் திரிபால்இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226- ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக டெல்லியில் 57 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் செவ்வாயன்று ஒரே நாளில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், தெலங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் மோடி இன்று மாலை மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஒமைக்ரான் பரவலை தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட உள்ளது. இதன் முடிவில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் குறைந்ததால், முன்பு நடைமுறையில் இருந்த இரவு நேர ஊரடங்கு, தவிர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வரலாம். அல்லது, புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.