நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இதே கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகனுக்கும் நளினிக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அவர் லண்டனில் வசித்து வரும் நிலையில் தனக்கு பரோல் வழங்கக் கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டு வந்த நிலையில் நளினிக்கும் பரோல் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசித்தது. இதில் சிறைத்துறை முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி நளினியின் பரோல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு குற்றவியல் வழக்கறிஞரான ஜின்னா ஆஜராகி “நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்” இதனையடுத்து நளினி தொடர்ந்த பரோல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒரே பெண் கைதி நளினி எனப்து குறிப்பிடத்தக்கது.