மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
மத்திய பிரதேசத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வா் சிவராஜ் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒமைக்ரான் வகை கரோனா உலகில் வேகமாகப் பரவிவரும் நிலையில் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிவது, கூட்டமான இடங்களைத் தவிா்ப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடுதல் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி இரவு 11 மணிமுதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றாா்.
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சம்: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு வியாழக்கிழமை நிலவரப்படி 346-ஆக உயா்ந்தது. மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 23 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக அங்கு ஒமைக்ரான் பாதிப்பு 88-ஆக உள்ளது.