வாகன இறக்குமதியைத் தடை செய்த ஒரே நாடு இலங்கை!
21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியைத் தடை செய்த ஒரே நாடு இலங்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருளாகும்.
மக்களுக்கு இவ்வாறான அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடையாகியுள்ள நிலையில், மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
எமது நாட்டின் வாகன இறக்குமதி மீது விதிக்கப்படும் வரி வீதம் மிகவும் அதிகம்.
வாகனத்தின் விலையை விடவும் நூற்றுக்கு 200 தொடக்கம் 300 வீதம் வரி விதிக்கப்படுகின்றது.
இதனால் தான் நாட்டில் வாகனங்களுக்கான விலை அதிகமாகக் காணப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான விலை மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது.
அந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது குறித்த வரி விதிப்பின் காரணமாக எமது நாட்டில் நான்கு மடங்கு விலை அதிகமாகக் காணப்படுகின்றது.
தற்போது அந்த விலை அதிகரிப்பை விட வாகன இறக்குமதி தடையின் காரணமாக பல மடங்கு அதிகரித்துள்ளது” – என்றார்.