ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் -மனோ கணேசன்.

“ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கின்றேன். இந்தச் செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும் எனவும் கோருகின்றேன்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதி அமைச்சர் அலி சப்ரியைப் பதவி விலகச் சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும், கெபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரைப் பதவி விலகச் சொல்கின்றார்.

இதென்ன கூத்து? எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படிச் சொன்னால் அதில் ஓர் அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.

ஆனால், இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை கெபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு.

அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரச தலைமையின் கவனத்துக்குக் கொண்டுவர முடிகின்றது. இந்தக் குறைந்தபட்ச அவகாசத்தையும்கூடத் தட்டிப் பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கின்றார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகின்றார். இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ்ப் பையன்களைத் தேடி வீட்டுக்குப் பொலிஸ் வருகின்றது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கின்றது.

ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு – ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கின்றேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்தச் செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்களை உடன் பதவி விலகுமாறு கோருகிறேன். இல்லாவிட்டால் இந்தப் பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.