திருமாவளவனின் அன்புக்கும் பேச்சுக்கும் கட்டுப்பட்டவன் நான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
“அம்பேத்கர் சுடர் விருதை பெரியார் திடலில் பெறுவதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது” என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனின் அன்புக்கும் பேச்சுக்கும் தான் கட்டுப்பட்டவன் என்றும் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2021ம் ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருதும், சொற்பொழிவாளர் நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருதும், குடியரசு கட்சித் தலைவர் பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், காயிதேமில்லத் பிறை விருது அல்ஹாஜ் மு.பஷீருக்கும் செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க.இராமசாமிக்கும் வழங்கப்பட்டது.
சென்னை பெரியார் திடரில் நடைபெற்ற இந்த விழாவில் அம்பேத்கர் சுடர் விருதை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான். அவர் பேசிய பேச்சுக்கும் கட்டுப்பட்டவன் தான். இதற்கு மேல் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இப்படிப்பட்ட விருதை வழங்கி என்னை பெருமைப்படுத்திய திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அம்பேத்கர் சுடர் விருதினை தருகிறேன் என்று திருமாவளவன் சொன்னபோது எனக்கு அச்சமிருந்தது. அம்பேத்கரின் விருதினை பெரும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை. எனது கடமையைத்தான் செய்தேன்.
மாநில ஆதிதிராவிடர் ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றைச் செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத் தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்பதே உண்மை. கருணாநிதி வழி வந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமைகொள்பவன். அண்ணல் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனப் பெயரிட்டவர் கருணாநிதி தான். மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை அதிகமாகத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான்.