நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு சிறை – உயர் நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழில் நடத்தி வந்த ஏ ஹெச் எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய இரு நிறுவனங்களும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து இரு நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு, ஆக்கிரமிப்புகளை கண்டறிய டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், கட்டுமானம் மேற்கொள்ளும் போது அஸ்திவாரம் போடுவது தரைதளம் எழுப்புவது போன்ற ஒவ்வொரு கட்டங்களிலும் ஆய்வுகள் நடத்தி, கட்டுமானங்கள் விதிகளின்படியும், கட்டிட அனுமதியின்படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மேற்கொண்டு கட்டிட அனுமதி வழங்க கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்களை சீல் வைத்து பிறப்பிக்கும் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரும் மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதை சம்பந்தப்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை பற்றி கவலைப்படாமல், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன், அவர்களின் ஐ ஏ எஸ் பதவிகளையும் பறிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது இரண்டாம் கட்டமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், மீண்டும் விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை சேலம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், சென்னை, திருவேற்காட்டில் உள்ள பசு மடத்துக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.