திருக்கோவில் போலீசாரை சுட்டுக் கொன்றவரின் தாய் , மகன் குறித்து சொன்னது என்ன?
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (24) துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி 4 போலீஸ் அதிகாரிகளது மரணத்துக்கு காரணமான , போலீஸ் சார்ஜன்ட்டின் தாயார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
8 ஆண்டுகளாக தனது மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் கூறினார்.
பொலிஸ் நிலையத்திற்குள் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழக்கக் காரணமான பொலிஸ் சார்ஜன்ட் தினேஷ் ரவீந்திர குமாரவின் தாயார் , சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
“எனது மகனுக்கு 2012ஆம் ஆண்டு முதல் கால் வலி உள்ளது. அவர் நோயாளியாக இருப்பதால் அவரால் சீருடை அணிய முடியாது. ஆரம்பத்திலிருந்தே, அவர் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டார். பிரச்னைகளை உருவாக்கி போலீசார் 7 பக்கங்கள் எழுதி விசாரித்தனர்.
“மகன் சம்மாந்துறையில் பணிபுரிந்த போது கூட அவருக்கு 100 நாட்கள் விடுமுறை வழங்கப்படவில்லை. அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தமையால் காவல் துறையைச் சேர்ந்த மற்றவர்கள், அவனை வெறுத்தார்கள். ‘லஞ்சம் கொடுத்து மருந்துவ லீவு வாங்கினீயா என நையாண்டி செய்துள்ளார்கள். மகன் மது அருந்துவதில்லை. எட்டு வருடங்களாக அந்த அழுத்தத்தில் இருந்தார்” என்றார்.
அவர் மேலும் “எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையால் நாங்களும் வருத்தப்படுகிறோம். 38 வருடங்களாக எந்த மனிதனுடனும் அவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஒரு அழைப்பை எடுத்து என்னிடம் சொல்லியிருந்தால் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வா என சொல்லியிருப்பேன். என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ”
“போலீஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கேள்விப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் என் மகன் வீடு திரும்பினான். அவர் மொனராகலை பொலிஸில் சரணடைய வந்துள்ளார். அவர் வரும்போதே லாகுகல எனும் பகுதியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்து என்னை வணங்கினான். வேறு எதுவும் சொல்லவில்லை. மொனராகலை போலீசுக்கு க்கு செல்ல வேண்டாம் அத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு நாங்கள் அவனிடம் கூறினோம்.” என்றார் அவர்.