போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ‘விங் கமாண்டர்’ ஹர்ஷித் சின்ஹா உயிரிழப்பு.

இந்திய போர் விமானம் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், விமானப் படைக்கு சொந்தமான, ‘மிக் – 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ‘விங் கமாண்டர்’ ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், நம் விமானப் படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் நேற்றிரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவலை விமானப் படை உறுதி செய்தது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1971 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், ‘மிக்’ போர் விமானங்கள் 482 முறை விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில், 171 பைலட்கள், 39 பொது மக்கள் உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் மிக் – 21 ரக போர் விமானங்கள் ஏராளமான முறை விபத்துகளில் சிக்கியுள்ளன. எனவே இதை, ‘பறக்கும் சவப்பெட்டி’ என, விமானிகள் அழைக்கின்றனர்.