கோவில் மனை வாடகை விவகாரம்: தமிழக அரசின் குழுவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

கோயில் மனை உள்ளிட்ட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மனைகள், வீடுகள், கட்டிடங்கள், கடைகளுக்கான வாடகை நிர்ணயம் செய்ய அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வரும் கோயில்மனை குடியிருப்போர் பிரச்சனைகளுக்கு அரசு சுமூக தீர்வு காண்பது அவசியமாகும். இதில் மடங்கள், திருச்சபைகள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போர் பிரச்சினைகளும் அடங்கியிருக்க வேண்டும்.

வீடில்லாத, எந்த இடத்திலும் வசிப்பதற்கு மனை நிலம் இல்லாத ஆயிரக் கணக்கான குடும்பங்கள், அந்தந்த கோயில்களின், வழி வழியான அறங்காவலர்களின் அனுமதி பெற்று, கோயில் நிலங்களை சீர்படுத்தி, அதில் வீடு கட்டி வழிவழியாக வாழ்ந்து வருகின்றன. இதில் கரடுமுடாக, கற்குவியலாக கிடந்த நிலத்தை மேம்படுத்தியது, வீடு கட்டியது என அனைத்துச் செலவுகளும் மனையில் வசித்து வரும் குடும்பத்தினரின் உழைப்பிலும், சேமிப்பிலும், கடன் பெற்றும் செய்யப்பட்டதாகும்.

கோயிலுக்கு சொந்தமான அடிமனை நிலத்திற்கு வசித்து வரும் குடும்பங்கள் கோயில் நிர்வாகத்துக்கு ஆண்டு குத்தகை (பகுதி) செலுத்தி வந்தனர்.

ஆண்டுக் குத்தகை செலுத்தும் முறையை மாற்றி, வீட்டின் நில மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யும் புதிய முறையை அரசு அமலாக்க தொடங்கியது. இதனால் கடுமையான வாடகை தொகை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வாடகை வசூலில் தேக்கமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் மனையில் குடியிருப்போர் பாதுகாப்புக் கேட்டு அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோயில் மனை உள்ளிட்ட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மனைகள், வீடுகள், கட்டிடங்கள், கடைகளுக்கான வாடகை நிர்ணயம் செய்ய அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உறுப்பினர்களாக அரசின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் கோயில் மனைகளில் குடியிருப்போர் கருத்துகள் பிரதிபலிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதிகார வர்க்கத்தின் அக உணர்வு மட்டுமே ஆதிக்கம் செலுத்தும். அதுவும் தலைமைச் செயலாளர் முன்வைக்கம் கருத்துக்கள் மட்டுமே செல்வாக்கு செலுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வாடகை நிர்ணயக் குழுவில் கோயில் மனை குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைக்கும் வகையில் தற்போது அமைக்கப்பட்ட குழுவை திருத்தி அமைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.