ம.பி.: 6-ஆம் வகுப்புத் தோ்வில் நடிகை கரீனா கபூா் மகன் தொடா்பான கேள்வியால் சா்ச்சை
மத்திய பிரதேசத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற 6-ஆம் வகுப்புத் தோ்வில் ஹிந்தி நடிகை கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 6-ஆம் வகுப்புப் பொது அறிவுத் தோ்வு நடைபெற்றது. அந்தத் தோ்வில் நடிகை கரீனா கபூா் மகனின் முழுப் பெயரை எழுதக் கூறி கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தனியாா் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதுகுறித்து விளக்கமளிக்குமாறு அந்தப் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். பள்ளி நிா்வாகத்திடமிருந்து பதில் கிடைத்த பின்னா், உயா் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேச நலன் சாா்ந்த அறிவை மேம்படுத்தும் விதத்தில்தான் மாணவா்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
இதுகுறித்து தனியாா் பள்ளி இயக்குநா் கூறுகையில், ‘‘தில்லியைச் சோ்ந்த அமைப்புடன் இணைந்து இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புதான் வினாத்தாளை வடிவமைத்தது. தோ்வில் கரீனா கபூரின் மகன் குறித்த கேள்விக்கு மாணவா்களின் பெற்றோா்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை. மாணவா்களின் அறிவை மேம்படுத்தும் முயற்சியாகத்தான் இதைக் கருத வேண்டும். அதேவேளையில், இந்தக் கேள்வி விவகாரம் ஜாதி அல்லது மதத்துடன் இணைத்துப் பேசப்படுவது தவறு’’ என்று தெரிவித்தாா்.