‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ மத்திய மாகாணத்தில் ஆரம்பம்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது.

நேற்று (25) முற்பகல் மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கும் பிற்பகல் கண்டி மாவட்டச் செயலகத்துக்கும் வருகை தந்த மாகாண மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள், செயலணியிடம் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

வருகை தந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்த குழுவின் தலைவர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதி அவர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுள்ளதுடன், குறித்த காலத்துக்கு முன்னதாகவே குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறிது காலம் சென்றாலும், அனைத்து மக்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கின்ற மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளை முன்வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தேரர் மேலும் குறிப்பிட்டார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து பிரேரணைகளை முன்வைப்பது சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். அவர் இதற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்து, அந்த மாகாணங்களில் வசிக்கும் மக்களின் கருத்துக்களையும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் கருத்துக்களையும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் கேட்டறிந்தார்.

இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரண்டு நாட்களில் மத்திய மாகாண மக்களின் கருத்துக்கள் தொடர்ந்தும் கேட்டறியப்படவுள்ளன.

குழுவின் முன் கருத்து தெரிவிக்க விரும்பும் எவரும் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு ,அதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். பின்வரும் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக்க தெரிவித்தார்.

குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ஷாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே மற்றும் பானி வேவல ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தொலைபேசி இலக்கம் – 011 2691775, முகவரி – அறை இலக்கம் 3G-19 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தலோக மாவத்தை, கொழும்பு – 07. மின்னஞ்சல் ocol.consultations@gmail.com

Leave A Reply

Your email address will not be published.