யாழில் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலை நினைவேந்தலின் பிரதான நிகழ்வு!
ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு ‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
அதன் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு சுமார் ஆயிரத்து முப்பத்து எட்டு பேர் சுனாமி அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டனர்.
பிரதான நிகழ்வு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் குழுவின் தலைவர் வே.தவராசா தலைமையில் இடம்பெற்றது.
நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா. அரியகுமார், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் றஜீவன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர், மருதங்கேணி பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபயசிங்க ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நினைவிடத்துக்குக் காணியை அன்பளிப்புச் செய்த ஓய்வுநிலை உதவி அரச அதிபர் புத்திரசிகாமணியின் பாரியார் ஜெகஜோதி பொதுச் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களின் உறவினர்கள் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளைப் படைத்து ஒப்பாரி வைத்து ஓலம் இட்டனர். இதனால் அப்பகுதி எங்கும் சோகமயமாகக் காட்சி அளித்தது.
இதேபோல் உடுத்துறை பத்தாம் வட்டாரத்தில் சுமார் 50 உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மணற்காட்டுப் பகுதியில் 72 உடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சவக்காலப் பிட்டியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக மணற்காடு புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்தைத் தொடர்ந்து சுனாமி நினைவாலயத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 72 உடலங்கள் புதைக்கப்பட்ட சவக்காலைப் பிட்டியில் அவர்களின் உறவினர்கள் உணவுப்பொருட்களை படைத்து பிள்ளைகளின், உறவுகளின், பெற்றோரின் இழப்பைத் தாங்கமுடியாது ஓலமிட்டு கதறி அழுதனர். இதனால் அப்பகுதி எங்கும் சோகமயமாகக் காட்சியளித்தது.
இதேபோல் வடமராட்சி, புலோலி சூசையப்பர் ஆலயத்தில் உடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக புலோலி சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை கோட்ட பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்ததையடுத்து உடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் உறவினர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று தாளையடி, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.