ஓமைக்ரான் பரவல்: கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்; புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை
ஓமைக்ரான் (Omicron) வகை வைரஸ் தொற்று வேகமாக பரவு வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாட்காவில் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 420க்கும் மேற்பட்டோருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அதன்படி, கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.
மேலும் ஓமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று முதலில் பதிவான கர்நாடகாவில் 10 நாட்கள் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வரும் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவு ஊரங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்புற வளாங்களில் எவ்வித விழாக்களும் பார்ட்டிகளும் நடத்த கூடாது. டிஜே கச்சேரி மற்றும் அதிகளவில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.