துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு !

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளையும் அவர்களது அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஒலுவிலைச் சேர்ந்த கே.எல்.எம். அப்துல் காதர், பாண்டிருப்பைச் சேர்ந்த அழகரெத்தினம் நவீனன், பிபிலையைச் சேர்ந்த டி.பி.கே.பி. குணசேகர, சியம்பலாண்டுவவைச் சேர்ந்த டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகிய 4 பொலிஸாருக்கும் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கே.எல்.எம். அப்துல் காதர் – சார்ஜென்ட் நிலையிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் ஆக தரமுயர்வு
அழகரெத்தினம் நவீனன் – கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜென்ட் ஆக தரமுயர்வு
டி.பி.கே.பி. குணசேகர – கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜென்ட் ஆக தரமுயர்வு
டி.எம்.ரி.எச். புஷ்பகுமார – கான்ஸ்டபிள் சாரதி நிலையிலிருந்து சார்ஜென்ட் சாரதி ஆக தரமுயர்வு
இச்சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் கைதான பொலிஸ் சார்ஜென்டிற்கு ஜனவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த 4 பொலிஸ் அதிகாரிகளினதும் வீடுகளுக்கு பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன (26) விஜயம் செய்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பில் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.