காலாவதியாகும் நேரத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்கள்!
காலாவதியாகவுள்ள உணவுப் பொருள்களை சலுகை விலையில் விற்பனை செய்வதை, உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் கட்டுப்படுத்தாததால், நுகர்வோர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நுகர்வோருக்கு தரமான உணவு பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006 அமல்படுத்தப்பட்டது. அதன்படி, சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், மறுபொட்டலமிடுபவர்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் நடமாடும் உணவு வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவினைப் பெற்றிருக்க வேண்டும்.
உரிமம் மற்றும் பதிவு பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்-2006 மற்றும் விதிகள் 2011 பிரிவு 63-இன் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்கள் பொட்டலமிடப்படும் தேதி மட்டும் கண்காணிக்கப்படும் நிலையில், அந்த உணவு பொருள் உற்பத்தி செய்யப்பட்ட விவரங்கள் குறித்து எவ்வித தகவலும் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படுவதில்லை. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, காலாவதியாவதற்கு குறைந்த நாள்களே எஞ்சியிருக்கும் உணவுப் பொருள்களை சலுகை விலையில் நுகர்வோரிடம் விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
பெரு நிறுவனங்களிடம் சிக்கும் நுகர்வோர் : கால் நூற்றாண்டுக்கு முன், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள், இன்றைக்கு சிறுநகரங்களிலும் காலூன்றியுள்ளன. அதிலும் குறிப்பாக, சில பெரு நிறுவனங்களின் பிடிக்குள் மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் வணிகமும் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த பெரு நிறுவனங்களின் அங்காடிகளில் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், 1-க்கு 1, 2-க்கு 1, 5-க்கு 1 இலவசம் என்ற விகிதாசாரத்திலும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஒரு உணவுப் பொருளுக்கு மற்றொரு சிறிய பொருள் இலவசமாக தரப்படுகிறது. இதுபோன்று விற்பனை செய்யப்படும் பொருள்களின் காலாவதி தேதியைச் சரிபார்ப்பதில் பெரும்பாலான நுகர்வோர் கவனம் செலுத்துவதில்லை.
இதைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் நூதன முறையில் நுகர்வோர்களை ஏமாற்றி வருகின்றனர்.
கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு: சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், பேரீட்சை, உலர் கொட்டைகள் (ட்ரை நட்ஸ்), செயற்கை நிறமூட்டி, செயற்கை மணமூட்டி, பருப்பு மற்றும் தானிய வகைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுபோன்ற உணவுப் பொருள்கள் பொட்டலமிடப்படும்போது அன்றைய தேதியையும், அதிலிருந்து குறிப்பிட்ட நாள்கள் அல்லது மாதங்களைப் பட்டியலிட்டு காலாவதி தேதியாகவும் வெளியிடப்படுகிறது. ஆனால், அந்தப் பொருள் தயாரிக்கப்பட்ட காலத்தை தயாரிப்பாளர்களும் வெளியிடுவதில்லை, அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதனால், நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரன்முறைப்படுத்த வேண்டியது அவசியம்: இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: குறிப்பிட்ட உணவுப் பொருளின் மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பினால், 14 நாள்களுக்குள் பரிசோதனை முடிவுக்கான அறிக்கை அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஆய்வக வசதி குறைபாடு காரணமாக, எந்த பகுப்பாய்வு முடிவும் 30 நாள்களுக்குள்கூட வருவதில்லை. இதனால், பகுப்பாய்வு முடிவு கிடைப்பதற்குள் தரமில்லாத அந்த உணவுப் பொருள்கள் விற்பனையாகி விடுகின்றன.
மொத்த விற்பனையாளர்களிடம் தேக்கமடையும் உணவுப் பொருள்களை 30 நாள்களுக்கு முன்னதாகக் கண்டறிந்து, அவற்றைச் சலுகை விலையில் (முதலுக்கு மோசமில்லாமல்) விற்பனை செய்வதற்கு திட்டமிடுகின்றனர். பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு சலுகை விலையிலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையிலும் விற்பனை உத்திகளை பின்பற்றி விற்கின்றனர்.
விலை குறைவால் ஈர்க்கப்படும் நுகர்வோர், 3 மாதங்களுக்குத் தேவையான பொருள்களை, ஒரே நேரத்தில் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். ஒரு மாதத்துக்குப் பின், அந்த உணவு பொருளை பகுப்பாய்வு செய்தால், உண்பதற்கு உகந்ததல்ல என்பது தெரியவரும்.
சில்லறை வணிகர்களிடம் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இது குறித்து நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு பொருள் உற்பத்தி செய்யப்பட்ட இடம், தேதி, இறக்குமதி செய்யப்பட்ட நாள் ஆகியவற்றை வெளியிடவும், அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.