தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு: மத்திய நிபுணர் குழு இன்று ஆய்வு
நாடு முழுவதும ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு மற்றும் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தியது ஆகியவற்றின் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
அதன்படி, மருத்துவர்கள் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார் மற்றும் தினேஷ் பாபு, ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து, இன்று தொடங்கி 5 நாட்களுக்கு இக்குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். முதல் நாளான இன்று, காலை 11.30 மணியளவில் சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர், தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர். இறுதியாக 5 நாட்கள் நிறைவடைந்த பிறகு, வல்லுநர்கள் குழு மத்திய சுகாதாரத்துறையிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில், மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 27 லட்சத்து 44 ஆயிரத்து 37 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 679 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றிலிருந்து உடல்நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்த 10 பேர் மரணமடைந்தனர். ஒரே நாளில் ஒரு லட்சத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரையில், சென்னையில் அதிகபட்சமாக 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 89 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும், ஈரோட்டில் 45 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.