தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்துக்கு இ.தொ.காவை அழைப்பது எமக்குப் பிரச்சினை இல்லை!
“தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அது எமக்குப் பிரச்சினையாக அமையாது” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வழங்கும் நெகிழ்ச்சியான வரவேற்பு, மனோ கணேசனின் கொதிநிலையை மேலும் உயர்த்தும் என்பது நிச்சயம்’ என்று பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பான செய்தி இணையத்தளங்களிலும் வெளியாகியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் மனோ கணேசன் எம்.பி. கூறியவை வருமாறு:-
“அரசில் உள்ள கட்சிகள் எமது பொது நிலைப்பாடுகளுக்கு உடன்பாடு தெரிவித்தால், அவர்களையும் இப்போதே உள்வாங்குவதில்கூட எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உண்மையில் இது ஏற்பாட்டாளர்களது பணி. வேறு எந்தவொரு கட்சி அரசியல்வாதி, சென்று இன்னொரு கட்சி அரசியல்வாதியை சந்திப்பது என்பது அவரவர் ‘நிகழ்ச்சிநிரல்’. நாம் இதுபற்றி பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.
அப்படி பார்த்தால், இ.தொ.கா. போன்ற மலையகக் கட்சிகள் மட்டுமல்ல, நீண்டகாலமாக 13ஆவது திருத்தம் பற்றி பேசி வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிலான ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, எம்.பி. பிள்ளையானின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, முன்னாள் எம்.பி. சந்திரகுமார் தலைமையிலான கட்சி போன்ற வடக்கு – கிழக்கு கட்சிகளும் நிறைய உள்ளன. இப்படி சில முஸ்லிம் கட்சிகளும் இருக்கலாம்.
ஆனால், முதல் வட்டத்தில் எதிரணி கட்சிகளையும், பின்னர் ஆளும் அணி கட்சிகளையும் அணுகலாம் எனக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் எமக்கு கூறினார்கள்.
அவர்களது கூற்றில் ஒரு நியாய ஒழுங்கு தெரிவதால், அதை நாம் ஏற்றுக்கொண்டடோம். இது பற்றி ஏற்பாட்டாளர்களான ரெலோ கட்சியினர் தமது நிலைப்பாட்டைக் கூறியுள்ளனர். முதல் வட்டத்தில் வேண்டுமானாலும்கூட யாரும் அழைக்கப்படட்டும். எமக்கு இதுவொரு பிரச்சினையே இல்லை” – என்றார்.