இடதுசாரி மக்கள் அலையில் தென் அமெரிக்கா : சுவிசிலிருந்து சண் தவராஜா
சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது.
2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்கிய மக்களின் விருப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடான பிரேசிலில் அடுத்த ஆண்டு அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் கூட தற்போதைய அரசுத் தலைவர் ஜாயர் பொல்சொனாரோ தோற்கடிக்கப்பட்டு, இடதுசாரித் தொழிற்சங்கத் தலைவரும், முன்னைநாள் அரசுத் தலைவருமான லூலா டா சில்வா வெற்றிபெறும் வாய்ப்பே உள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் வெளிவந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலியில் நடைபெற்ற தேர்தலின் முதல் சுற்றில் கப்ரியேல் போரிக், இரண்டாம் சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோசோ அன்ரோனியோ காஸ்ற்றை விடவும் இரண்டு விழுக்காடு வாக்குகளைக் குறைவாகவே பெற்றிருந்தார். இருந்தும் இரண்டாவது சுற்றில் அவரை விடவும் 12 விழுக்காடு வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றிருப்பது நோக்கத்தக்கது. அது மாத்திரமன்றி, முதல் சுற்றுத் தேர்தலில் வாக்களித்திருந்த மக்களை விடவும் 1.2 மில்லியன் மக்கள் இரண்டாவது சுற்றில் அதிகமாக வாக்களித்திருந்தமை சொல்லும் சேதி கவனத்தில் கொள்ளத்தக்கது.
1973இல் சல்வடோர் அலெண்டே தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவினதும், இராணுவத்தினதும் துணையுடன் ஆட்சியைப் பிடித்த சர்வாதிகாரியான அகஸ்டஸ் பினாசே தலைமையில் 1990 வரை நீடித்த சர்வாதிகார ஆட்சியும், அக் காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும் இன்னமும் மக்கள் மனதில் நீங்காத நினைவாக உள்ள நிலையில், அவரின் ஆட்சியை வெளிப்படையாகவே ஆதரித்துப் பரப்புரைகளை மேற்கொண்ட காஸ்ற் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு பெரும்பாலான மக்கள் வந்திருந்தமையைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
பினாசேயின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமது தலையில் தாமே மண்ணை வாரிக் கொட்டுவதற்கு ஒப்பானது என்பதை அவர்கள் நெஞ்சில் நிறுத்தி வாக்களித்து, காஸ்ற் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தைத் தோற்கடித்திருக்கின்றார்கள்.
இதேவேளை, தேர்தல் வெற்றியின் பின்னர் நடப்பு அரசுத் தலைவராக உள்ள செபஸ்ரியான் பினேராவைச் சந்திக்கச் சென்ற போரிக், தனது அரசியல் வழிகாட்டியும், சர்வாதிகாரி பினாசேவின் படைகளால் படுகொலை செய்யப்பட்டவருமான முன்னைநாள் அரசுத் தலைவர் சல்வடோர் அலெண்டேயின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் அறிவிப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாக சோசலிச ஆட்சியை உருவாக்கும் மாதிரியை அறிமுகம் செய்த அலெண்டேயின் கனவு மூன்று வருடங்களிலேயே சிதைக்கப்பட்டு விட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு சர்வாதிகாரி பினாசேயால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிந்திருந்தது. ஆனால், எப்போதும் வரலாற்றில் இருந்து பாடம் கற்கும் இடதுசாரிகளால் தென் அமெரிக்காவில் தொடர்ச்சியாக அரசாங்கங்களைக் கைப்பற்ற முடிகின்றது என்றால் அது அலெண்டேயின் கனவு நனவாகி வருவதையே குறித்து நிற்கின்றது.
கம்யூனிச கியூபா, அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் 60 வருடங்களைக் கடந்தும் தாக்குப்பிடித்து நிற்கின்றது. பின்னாளில் ஹியூகோ சாவெஸ் தலைமையில் உருவான வெனிசுவேலா அரசாங்கம், சாவெஸின் மரணத்தின் பின்னர் நிக்கலஸ் மடுரோ தலைமையில் நெருப்பாற்றில் குளித்தபடியே தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையைப் பார்க்க முடிகின்றது.
பொலிவியாவில் ஈவோ மொரலஸ் தலைமையில் உருவான அரசாங்கம் ஒரு குறுகிய நெருக்கடியைச் சந்தித்த போதிலும் தற்போது அதிலிருந்து மீண்டு முன்னைய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது.
தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் அடிக்கத் தொடங்கிய இடதுசாரி அலை, 2003இல் ஹியூகோ சாவெஸின் மறைவைத் தொடர்ந்து ஓரளவு தடுமாறத் தொடங்கிய போதிலும். 2018இல் மெக்சிகோ தேர்தலில் அன்ட்றியஸ் மனுவல் லொபஸ் ஒப்ராடொர் பெற்ற வெற்றியின் பின்னால் தொடர்ச்சியாக இந்தப் பிராந்தியத்தில் இடதுசாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் கிட்டும் போக்கு துரிதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
நடப்பு வருடத்தில், அண்மையில் ஹொன்டுராஸில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான ஸியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, நிக்கரகுவாவில் ஏலவே மூன்று தடவைகள் அரசுத் தலைவராகப் பதவி வகித்த டானியல் ஒர்ட்டேகா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். பெரு அரசுத் தலைவர் தேர்தலில், பெட்ரோ காஸ்ரில்லோ வெற்றி பெற்றுள்ளார்.
அரசியல் நோக்கர்களால் ‘செம்மஞ்சள் அலை’ என வர்ணிக்கப்படும் இந்தப் போக்கு தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் நிலவுவது அசாதாரணமான ஒரு போக்கல்ல. பிரித்தானிய சாம்ராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் கோரிப் போராடிய வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், சுதந்திரத்தின் பின்னான அமெரிக்கா ஏனைய நாடுகளை அடிமைப்படுத்தும் போக்கையே கொண்டிருக்கின்றது. தனது ஏகாதிபத்தியக் கொள்கைகளை நிறைவேற்ற எத்தகைய எல்லைக்கும் செல்வதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை, யாருடனும் கைகோர்க்கவும் பின்வாங்கியதில்லை.
அமெரிக்க ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கு தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மிகக் குறைவான நண்பர்களையும் மிக அதிகமான எதிரிகளையும் உருவாக்கியுள்ளது, தொடர்ந்தும் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது. அமெரிக்காவின் நண்பர்களாக விளங்குபவர்கள் மனித உரிமைகளைக் காலடியில் போட்டு மிதிப்பவர்களாகவும், சொந்த நாட்டு மக்களைக் காட்டிக் கொடுப்பவர்களாகவுமே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மக்களின் வெறுப்புக்கு உரியவர்களாக விளங்குகின்றனர். இந்நிலையில், ‘இழப்பதற்கு எதுவுமே இல்லாத’ மக்கள் கூட்டத்தை புரட்சிகரக் கோட்பாடுகள் பற்றிக் கொள்வது ஆச்சரியமான விடயமல்ல.
உலகெங்கும் புரட்சியாளர்களின் ஆகர்ச புருசர்களாக விளங்கும் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகியோரின் செல்வாக்கு இந்தப் பிராந்தியத்தில் அளவு கடந்ததாக உள்ளது. அவர்களது புகழை அழித்துவிட அல்லது அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாமானிய மக்களோடு அவர்களை மென்மேலும் நெருக்கமாக ஆக்கிக்கொண்டே செல்கிறது.
தக்கென பிழைக்கும் என்பது இயங்கியல். தங்கள் வாழ்க்கையைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் மக்களின் போராட்டங்களும் முடிவின்றித் தொடர்பவையே. சில வேளைகளில் பின்னடைவைச் சந்தித்தாலும், இறுதியில் மக்கள் வெற்றியைப் பெற்றே தீருவர். தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் தற்போது அடிக்கும் ‘செம்மஞ்சள் அலை’ மக்களின் அனைத்துப் பிரச்சைனைகளுக்குமான தீர்வாக அமையாது போனாலும், தீர்வை நோக்கிய பயணத்தில் ஒரு படிநிலையாக அமையக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.