நீர்க்கட்டணம் செலுத்தத் தவறிய 40 இற்கும் மேற்பட்ட பிரமுகர்கள்! – வாசு எச்சரிக்கை.
இலங்கையில் 40 இற்கும் மேற்பட்ட பிரமுகர்கள் நீர்க்கட்டணம் செலுத்தத் தவறியுள்ளனர் என்றும், நீர் விநியோகத்தைத் துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40 இற்கும் மேற்பட்ட பிரமுகவர்கள் நீரைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 10 மில்லியன் ரூபாவைத் தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் செலுத்தத் தவறியுள்ளனர்.
மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு அதிக தொகையைச் செலுத்தத் தவறியுள்ளார். அவர் செலுத்தாத தொகை 1.8 மில்லியன் ரூபா என்று தெரியவந்துள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஒருவர் நீரைப் பெற்றுக்கொண்டதற்காக சுமார் 45 ஆயிரம் ரூபாவை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் செலுத்தத் தவறியுள்ளார்.
நீர்ப்பாசனக் கட்டணத்தைச் செலுத்தாதவர்களில் இரண்டு முன்னாள் அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் தற்போது அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பயன்படுத்தப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரின் நிலுவைத் தொகை தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்துக்குக் குறித்த அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதையடுத்து, நீர்க் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் நீர் விநியோகத்தைத் துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.