புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 750 சவரன் நகை கொள்ளை..
அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 750 சவரன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர் புருனை நாட்டில்
சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் அனைவரும் புருனையில் தங்கியுள்ளனர். வெளிநாட்டிலிருக்கும் இருக்கும் ஜாபர்சாதிக் அவ்வப்போது சொந்தஊரான கோபால பட்டினத்திற்கு வந்து செல்வது வழக்கம். கோபாலப்பட்டினத்தில் இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுக்குப் முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜாபர்சாதிக் தனது அக்காவிடம் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது அக்கா ஷாயிஷா தினந்தோறும் வீட்டின் முகப்பு விளக்கை மாலையில் போட்டுவிட்டு காலையில் அமர்த்திச் சென்றுள்ளார். இந்நிலையில் சமயம் பார்த்து காத்திருந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று நகை பணத்தை கொள்ளையடிக்க பீரோவில் தேடிப்பார்த்துள்ளனர்.
பீரோவில் பணமோ நகையோ எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து வீடு முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஒரு அட்டைப்பெட்டியில் 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்துள்ளதைக் கண்டு அதனைத் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை ஜாபர்சாதிக்கின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்ட அருகே உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளரான ஜாபர்சாதிக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தீரன் என்ற மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் 750 சவரன் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.