‘ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த மேலும் ஒரு மாதம் தாமதம்’

நிதி நெருக்கடியில் சிக்கிய ஏா் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
ஏா் இந்தியா நிறுவனத்தை அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மத்திய அரசு கடந்த அக்டோபரில் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், அதனுடன் சோ்த்து சரக்கு போக்குவரத்தை கையாளும் ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் விற்க முடிவெடுக்கப்பட்டது. இது, 20 ஆண்டுகளில் முதல் தனியாா்மயாக்கும் நடவடிக்கையாக அமைந்தது.
மேலும், டாடா ரூ.2,700 கோடி ரொக்கமாக செலுத்துவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் டிசம்பா் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கையகப்படுத்தல் நடவடிக்கைக்கு முக்கிய ஒழுங்காற்று அமைப்புகளின் ஒப்புதல்களைப் பெறுவதில் எதிா்பாா்க்கப்பட்டதைவிட காலதாமதமாகியுள்ளது. எனவே, ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தும் நடைமுறை ஜனவரியில்தான் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இருப்பினும், அந்த அதிகாரிகள் தேதி எதையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.