திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி செய்தி
புத்தாண்டு ஆரம்பமாவதற்கு முன் , ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு முக்கிய நாள்களில், திருத்தந்தையர், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, உரோம் நகருக்கும், உலகினர் அனைவருக்கும் ஊர்பி எத் ஓர்பி என்ற சிறப்புச் செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் வழங்கும் பழக்கம், 13ம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிரகரி அவர்களின் தலைமைப்பணி காலத்தில் தொடங்கியது. டிசம்பர் 25, இச்சனிக்கிழமை, கிறிஸ்மஸ் பெருவிழா நாளில், பகல் 12 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, உரோம் நகருக்கும், உலகினர் அனைவருக்குமென்று, ஊர்பி எத் ஓர்பி என்ற சிறப்பு செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கினார். திருத்தந்தையின் ஆசீரைப் பெறுவதற்காக, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தை திருப்பயணிகள் கூட்டம் நிறைத்திருந்தது. அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! என்று சொல்லி, ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தி
இந்த உலகைப் படைத்து, வரலாற்றிற்கும், மனித சமுதாயத்தின் பயணத்திற்கும் அர்த்தம் தந்த கடவுளின் இறைவார்த்தை, மனிதஉரு எடுத்து, நம் மத்தியில் குடியிருக்க வந்தது. அவர், மெல்லிய குரல் போன்று, தென்றல் காற்றின் சலசலப்புபோன்று வந்து, இந்தப் பேருண்மைக்குத் தங்களைத் திறந்துவைத்திருக்கும் அனைத்து மனிதரின் இதயத்தை வியப்பால் நிரப்புகிறார். நம்மோடு உரையாடும்வண்ணம், இறைவார்த்தை மனிதஉரு எடுத்தது. கடவுள் தமக்குத்தாமே பேசிக்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில் தந்தை, மகன், மற்றும், தூய ஆவியாராக இருக்கின்ற கடவுளே, உரையாடல்தான். மனித உடலெடுத்த இறைவார்த்தையாம், மனிதரான இயேசுவின் வருகையால், கடவுள் நமக்கு சந்திப்பு, மற்றும், உரையாடலின் பாதையைக் காட்டியுள்ளார். உண்மையில், நம்பிக்கை மற்றும், எதிர்நோக்கில், நாம் அந்த வழியை அறிந்து, பின்பற்றும்வண்ணம், கடவுள் தாமே மனிதவடிவு பாதையைத் தெரிவுசெய்தார்.
உரையாடல் பாதைகள்
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, “குடும்பங்கள் மற்றும், குழுமங்களை ஒன்றுசேர்த்து வைத்திருக்கும் பல மனத்தாராளமிக்க மனிதரின் பொறுமையோடுகூடிய உரையாடல் இல்லாமல் இருந்திருந்தால், இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?” (Fratelli Tutti, 198). இந்த பெருந்தொற்றுக் காலத்தில் இதை நாம் அதிகம் அதிகமாக உணர்ந்துள்ளோம். இப்பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாவற்றையும் நாமாகவேச் செய்யத்துவங்கும் நிலை வளர்ந்துவருகிறது. மற்றவரைச் சந்திப்பதற்கும், ஒன்றிணைந்து காரியங்களை ஆற்றுவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வது நிறுத்தப்படுவதும் வளர்ந்துவருகிறது. உலக அளவிலும், உரையாடலைத் தவிர்க்கும் ஆபத்து உள்ளது. இது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, உரையாடலின் நீண்ட பாதையை அமைப்பதைவிடுத்து, குறுகிய வழிகளை மேற்கொள்ளும் சிக்கலான நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஆனால், உரையாடல் பாதைகள் மட்டுமே, போர்களுக்கும், அனைவருக்கும் நிலையான பலன்கள் கிடைக்கவும் தீர்வுகளைக் காண வழிநடத்தும். உண்மையான அமைதியின் ஊற்றாகிய மீட்பரின் பிறப்புச் செய்தி, நம் இதயங்களிலும், உலகம் அனைத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும்போதுகூட, பெரிய எண்ணிக்கையில் போர்கள், பிரச்சனைகள் மற்றும், பிணக்குகள் ஆகியவை தொடர்ந்து இடம்பெற்றுவருவதற்கு நாம் சாட்சிகளாக இருக்கிறோம். இவை ஒருபோதும் முடிவுறாததுபோல் தெரிகின்றன. அவற்றிற்கு நாம் பழக்கப்பட்டவர்களாக, அவை பற்றி அக்கறை கொள்ளாதவர்களாக மாறிவருகிறோம். பல சகோதரர், சகோதரிகளின் வேதனை மற்றும், கடுந்துன்பத்தின் அழுகுரலைக் கேட்காமல் இருக்கும் ஆபத்தையும் எதிர்கொள்கிறோம்.
மத்தியக் கிழக்கில் துன்புறும் மக்கள்
இவ்வேளையில் பத்தாண்டுகளுக்கு மேலாக, போரை எதிர்கொண்டுவரும் சிரியா நாட்டு மக்களை நினைத்துப் பார்ப்போம். இப்போரில் பலர் பலியாகியுள்ளனர், மற்றும், அதனால், சொல்லமுடியாத எண்ணிக்கையில் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். நீண்டகாலப் போருக்குப்பின் மீள்கட்டமைப்பில் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஈராக் நாட்டை நோக்குவோம். ஏராளமான கடுந்துயரங்களை எதிர்கொண்டுவரும், மற்றும், அனைவராலும் புறக்கணிக்கப்படும் ஏமன் நாட்டிலிருந்து எழும்பும் சிறாரின் அழுகுரலுக்கு நம் செவிகளைத் திறப்போம். இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவில், தீர்வுகள் இன்றி, கடுமையான சமூக மற்றும், அரசியல் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவரும், பதட்டநிலைகளை நினைத்துப் பார்ப்போம். இயேசு பிறந்த பெத்லகேமை நம்மால் மறக்க முடியாது. பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளாலும், புனித பூமிக்கு திருப்பயணிகள் செல்வது தடைபட்டிருப்பதாலும், அந்நகரம் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. பொருளாதார மற்றும், சமுதாய அளவில் துன்பங்களை எதிர்கொள்ளும் லெபனோன் நாட்டையும் நினைத்துப் பார்ப்போம்.
எனினும், இரவின் இதயத்தில், நம்பிக்கையின் அடையாளம் தெரிகின்றது. கவிஞர் தாந்தே கூறியதுபோல், இன்று, சூரியனையும், மற்ற விண்மீன்களையும் நகரச்செய்யும் அன்பு மனிதஉரு எடுத்துள்ளது. குளிரான இரவில், அவர் தம் பிஞ்சுக்கரங்களை நம்மை நோக்கி நீட்டுகிறார். நாம் உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருக்க அவரிடம் சக்தி கேட்போம். அனைவரின் இதயங்களில், ஒப்புரவு மற்றும், உரையாடல் தூண்டப்படுமாறு இந்தப் பெருவிழா நாளில், அவரிடம் மன்றாடுவோம். குழந்தை இயேசுவே, மத்தியக்கிழக்குப் பகுதிக்கும், உலகம் அனைத்திற்கும் அமைதி மற்றும், நல்லிணக்கத்தை அருளும். புலம்பெயர்ந்தோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்களைக் காத்தருளும். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, போர்களால் மட்டுமே சோதிக்கப்பட்ட ஆப்கான் மக்களுக்கு ஆறுதலாயிரும். அனைத்து மக்களுக்கும் அரசரே, போர்கள் மற்றும், பிரச்சனைகளால் கலக்கம் அடைந்துள்ள சமுதாயங்களுக்கு அமைதியைக் கொணர, அரசியல் அதிகாரிகளுக்கு உதவியருளும்.
மியான்மாருக்காக செபம்
மியான்மார் மக்களைப் பேணிப் பாதுகாத்தருளும். அந்நாட்டில் கிறிஸ்தவ சமுதாயங்களும், வழிபாட்டுத் தலங்களும் அடிக்கடி தாக்கப்படுகின்றன, மக்களின் அமைதியான வாழ்க்கை கருமேகங்களால் சூழ்ந்துள்ளது. தடைகளுக்கு மத்தியில், சந்திப்பு மற்றும், உரையாடலில் நம்பிக்கை வைத்து, அவற்றில் ஈடுபடும் மக்களுக்கு ஒளி மற்றும், ஆதரவின் ஊற்றாக இருந்தருளும். உக்ரைன் நாட்டில் தொடங்கியுள்ள தாக்குதல்களைத் தடைசெய்யும்.
ஆப்ரிக்கா, அமெரிக்க நாடுகளில் அமைதி
அமைதியின் இளவரசரே, எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் தேவைகளை முன்னிறுத்தி, அச்சமற்ற சந்திப்பு வழியாக, ஒப்புரவு மற்றும், அமைதியின் பாதையை, மீண்டும் கண்டுணர, எத்தியோப்பியா நாட்டிற்கு உதவிசெய்யும். பன்னாட்டுப் பயங்கரவாத வன்முறையை எதிர்கொண்டுவரும் சாஹெல் பகுதியில் வாழும் மக்களின் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும். பிரிவினைகள், வேலையின்மை, மற்றும், பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றால் துன்புறும் வட ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் பக்கம், உம் கண்களைத் திருப்பியருளும். சூடான் மற்றும், தென் சூடான் நாடுகளில் உள்நாட்டுப் போர்களால் துன்புறும் பல சகோதரர், சகோதரிகளின் துயரங்களைக் களைந்துவிடும். அமெரிக்க நாடுகளின் அனைத்து மக்களின் உரிமைகளும், கலாச்சார மதிப்பீடுகளும் அங்கீகரிக்கப்பட்டு, உரையாடல் மற்றும், ஒருவர் ஒருவரை மதிப்பதன் வழியாக, அம்மக்களின் இதயங்களில், ஒருமைப்பாடு, ஒப்புரவு மற்றும், அமைதியான நல்லிணக்க விழுமியங்கள் மேலோங்கி இருக்க அருள்புரியும்.
இறைமகனே, பெருந்தொற்று காலத்தில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைத் தேற்றியருளும். உரிமை மீறல்களால் துன்புறும் சிறார் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்கு நம்பிக்கையை வழங்கும். வயது முதிர்ந்தோருக்கு, குறிப்பாக தனிமையில் வாழ்வோருக்கு உமது ஆறுதலைத் தாரும். குழந்தைகளுக்கு முதல் கல்வியாளர்களாக உள்ள குடும்பங்களில், அமைதி மற்றும் ஒன்றிப்பு நிலவச்செய்யும். நோயாளிகளுக்கு குணமளித்தலையும், நலவாழ்வுப் பணியாற்றுவோருக்கு நல்ல பலன்களையும் அளித்தருளும்.
பெத்லகேம் குழந்தையே, போர்க் கைதிகள், மற்றும், அரசியல் கைதிகள் விரைவில் வீடுதிரும்ப அருள்புரியும். புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் போன்றோரின் கடுந்துன்ப நிலைகளை நாங்கள் புறக்கணிக்காதிருக்க உதவியருளும்.
மனிதராகப் பிறந்த நித்திய இறைவார்த்தையே, அக்கறையின்மையால் துன்புறும் எம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் மீது நாங்கள் அக்கறையோடு இருக்கச் செய்தருளும். இதற்கு அரசியல் தலைவர்கள், உறுதியான ஒப்பந்தங்களை எடுக்க, அவர்களைத் தூண்டியருளும். இதனால், வருங்காலத் தலைமுறையினர் சுற்றுச்சூழலை மதிக்கும் ஒரு வாழ்வை வாழ்வார்கள்.
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, இந்த நம் காலத்தின் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது. ஏனெனில் “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார்” (எசா.9,6). இறைவார்த்தையான அவர், அழுவதற்கு மட்டுமே திறனைக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் அவருக்கு உதவி தேவைப்படுகிறது. மற்ற குழந்தைகள் போல, அவரும் பேசுவதற்குக் கற்றுக்கொள்ள விரும்பினார். தந்தையாம் கடவுளும், மற்றவரும் பேசுவதை நாமும் கேட்கமுடியும், மற்றும், சகோதரர், சகோதரிகளாக, உரையாடலில் ஈடுபடமுடியும் என்பதற்காக இவ்வாறு அவர் விரும்பினார். எமக்காகப் பிறந்துள்ள கிறிஸ்துவே, அமைதியின் பாதைகளில் உம்மோடு நடப்பதற்கு எமக்குக் கற்றுத்தாரும்.
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என்று, உரோம் நகருக்கும், உலகுக்கும் வழங்கிய ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியை இவ்வாறு, நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், தன் சிறப்பு ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை. இந்த ஆசீரை மிகுந்த மரியாதையோடும், பக்தியோடும், ஆன்மீகத் தயாரிப்புக்களோடும் பெறுகின்றவர்களுக்கு நிறைபேறு பலன் உள்ளது. இந்தப் பலனை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இருப்பவர்கள் மட்டுமன்றி, இதில் நேரடியாகப் பங்குகொள்ள இயலாமல், வானொலி தொலைக்காட்சி வழியாக இதைப் பெறுபவர்களுக்கும் இப்பலன் உண்டு என்பது, 1985ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வத்திக்கான் சுவிஸ் கார்ஸ்ட்ஸ் அமைப்பும், இத்தாலிய இராணுவமும், தேசியப் பண்களைப் பாடி, திருத்தந்தைக்கு மரியாதை செலுத்தியது.
உலகில் போர்கள் முடிவடைந்து அனைவரும் அமைதியிலும், ஒப்புரவிலும் மன்னிப்பிலும் அன்பிலும் வாழவேண்டும் என்று, உண்மையான அமைதியின் அரசராம் பாலன் இயேசுவிடம் இறைஞ்சுவோம். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர், கைவிடப்பட்டோர், கைதிகள், ஏழைகள் என அனைவரின் நல்வாழ்வுக்காக குழந்தை இயேசுவிடம் மன்றாடுவோம். உங்கள் எல்லாருக்கும் மீண்டும் எமது கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்
– KR