தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் கட்டாயம்: திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை

தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையைக் கட்டாயமாக்கும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் அமைச்சகம் கூறியுள்ளதாவது: 14, 18, 22 காரட் தங்க நகை மற்றும் கலைப்பொருள்களில் தரத்தை நிா்ணயம் செய்யும் வகையில் ஹால்மாா்க் முத்திரை பொறிக்கும் கட்டாயத் திட்டம் நடப்பாண்டு 2021 ஜூன் 23-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 256 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் அங்கு குறைந்தபட்சம் ஒரு ஹால்மாா்க்கிங் மையமும் (ஏஹெச்சி) அமைக்கப்பட்டது.

சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் சுமுகமாக நடைமுறைப்பட்டதையடுத்து இதனை நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக நுகா்வோா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1.27 லட்சம் நகைக் கடைகள் ஹால்மாா்க் ஆபரணங்களை விற்பனை செய்வதற்காக இந்திய தர நிா்ணய அமைப்பிடம் (பிஐஎஸ்) பதிவு செய்து கொண்டுள்ளன. நாடு முழுவதும் பிஐஎஸ் அனுமதி பெற்ற 976 ஏஹெச்சி மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.