அரசின் இயலாமையை மூடிமறைக்க செயலாளர்களை மாற்றும் கோட்டா! – சஜித் அணி குற்றச்சாட்டு.
அரசின் இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிக் கொண்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சுக்களின் செயலாளர்களையோ அல்லது ஜனாதிபதியின் செயலாளர்களையோ மாற்றுவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு நிறைவடையும்போது சுற்றுலாத்துறையின் ஊடாக 3.5 பில்லியன் டொலர்கள் நாட்டுக்குக் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சிரித்துக்கொண்டே கூறுகின்றார். ஆனால், உண்மையில் அரசு டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது.
நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசும், தற்போதைய அரசு போல வெளிநாடுகளுக்குச் சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை” – என்றார்.