பஞ்சாயத்துக்கு காவல் நிலையம் வந்த மாடு-கன்று
வெட்டுக்குத்து, வாய்க்கா-வரப்பு, அடிதடி போன்ற பிரச்சனைகளுக்கு காவல் நிலையங்களில் பஞ்சாயத்து நடப்பது வழக்கம். ஆனால் புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆரோவில் காவல்நிலையத்தில் நூதனபஞ்சாயத்து வந்துள்ளது.
பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும் காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்துக்கு வந்துள்ளது. பசுமாடு ஒருவரிடமும் கண்ணுகுட்டி ஒருவரிடமிருந்து உள்ளது. இதன் உரிமையாளர் யார் என்பது தான் இப்போதைய பஞ்சாயத்து.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக், 60; இவர் வளர்த்து வந்ததாக கூறப்படும் பசு மாடு, 10 நாட்களுக்கு முன் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கூட்ரோட்டைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 28, என்பவரின் வீட்டில், மாடு ஒன்று கன்று ஈன்றுள்ள தகவல் அசோக்கிற்கு தெரிய வந்தது. விக்னேஸ்வரனின் வீட்டிற்கு விரைந்த அசோக், தன்னுடைய மாடு என கூறி கேட்டுள்ளார்.
அவர் தராததால் பசு மாட்டை மட்டும் தனது வீட்டிற்கு ஓட்டி வந்து விட்டார். தகவலறிந்த விக்னேஸ்வரன், அசோக் வீட்டிற்குச் சென்று, தன்னுடை மாட்டை ஏன் ஓட்டி வந்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆரோவில் போலீசார், இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் விட்டுக் கொடுக்காமல் மாடு தங்களுடையது என வாதம் செய்தனர்.
இதனால், மாடு யாருடையது என்பதை விசாரித்து முடிவு செய்ய திட்டமிட்ட போலீசார் பசு மாடு தங்களுடையது என்பதற்கான ஆதாரத்தை எடுத்து வருமாறு கூறி இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், பிரச்னை முடிவுக்கு வரும் வரை பசுவையும், கன்றையும் பிரிக்க வேண்டாம்; போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து கட்டும்படி அசோக், விக்னேஸ்வரனிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் பசுவையும், கன்றையும் ஓட்டி வந்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கட்டினர். மூன்று நாட்களாக பசுவுக்கும், கன்றுக்கும் வைக்கோல் போட்டு போலீசார் பராமரித்து வருகின்றனர்.