மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு: பாமக தீர்மானம்

அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,”2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்;2022-ஆம் ஆண்டை வரவேற்போம்” என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் கலந்துகொண்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக, அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் முழுமையான சமூகநீதியை நிலைநிறுத்த முடியும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி வன்னியர் சங்கத்தை நிறுவியபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும்.
அதற்கான தேவை இன்று வரை தொடர்வதை எவரும் மறுக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள் உள்ளிட்டோரின் கல்வி, வேலைவாய்ப்பு நிலைமையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள தொழில் சமூகங்களான நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குறும்பர் ஆகிய சமூகங்களின் நிலையும், குயவர், வேட்டுவக் கவுண்டர், ஊராளிகவுண்டர் ஆகியோரின் சமூக கல்வி நிலையும் மோசமாகவே உள்ளன.

இந்த நிலையைப் போக்க தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உள் இடஒதுக்கீடு / தொகுப்பு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.