கொரோனாவால் இறப்போரின் நல்லடக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் இடப்பற்றாக்குறை…..
கொரோனாவால் உயிரிழப்போர் ஓட்டமாவடி – மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 150 உடல்களையே அங்கு அடக்கம் செய்ய முடியும் என ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை தெரிவித்துள்ளது.
எனவே, உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு வேறு இடங்களை பெற்றுக்கொடுக்குமாறு தாம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதேச சபையின் தலைவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரிலுள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் இதுவரை COVID தொற்றுக்குள்ளாக 3200-க்கு அதிமானவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இப்பகுதியில் சுமார் 100 உடல்களை அடக்கம் செய்ய முடியும் எனவும், அதற்காக ஒதுக்கப்பட்ட காணி தற்போது முடிவடைந்து வருவதாகவும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் M.V.நௌபர் தெரிவித்தார்.
இந்நிலையில், மஜ்மா நகரில் சுமார் 4000 உடல்களை அடக்கம் செய்ய முடியும் என நம்புவதாக சுகாதார அமைச்சின் COVID-19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
அதனையும் தாண்டும் போது, ஒவ்வொரு மாகாணங்களிலும் அதற்கான இடங்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.