இச்சாதனையை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் – முகமது ஷமி.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3ஆவது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த 200 விக்கெட்டுக்களை அவர் குறைந்த பந்துகளில் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்காக தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது மட்டுமின்றி தான் இன்று ஒரு கிரிக்கெட் வீரராக நிற்பதற்கும் யார் காரணம் என்கிற நெகிழ்ச்சியான ஒரு தகவலை ஷமி நேற்றைய போட்டி முடிந்த பின்பு பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் இன்று இருக்கும் நிலைமைக்கு என் அப்பாதான் காரணம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் நான். இன்றளவும் எங்களது கிராமத்தில் வசதிகள் முன்னேறவில்லை. அந்த சூழலிலும் என்னை 30 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தவர் என் தந்தை.
அந்தக் கடினமான நாட்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அப்படி கடுமையான பயிற்சியை மேற்கொண்ட நான் இன்று இவ்வளவு பெரிய வீரராக நிற்க எனது தந்தை மட்டுமே காரணம் அவருக்காக இந்த சாதனையை நான் அர்பணிக்கிறேன்” என்று உருக்கமாக பேசியிருந்தார்.
ஷமியின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டேக் மூலம் இறந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட்டில் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் முகமது ஷமி 13 ஆவது இந்திய பவுலராக 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.