பாக்ஸிங் டே டெஸ்ட்: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்.
தென் ஆப்பிரிக்கா – இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதையடுத்து, 130 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை இன்று ஆடத் தொடங்கிய இந்திய அணி 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி ஏற்கெனவே இருந்த 130 ரன்கள் முன்னிலை மற்றும் 174 ரன்கள் ஆகியவற்றைச் சேர்த்து 305 ரன்கள் இலக்காகத் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 50 ஓவர்களில் ஆட்டமிழந்துதது,
இந்த 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கேப்டன் கோலி (18), புஜாரா (16), ரஹானே (20) தூண்கள் எனப் பேசப்பட்டவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் கோலி இரு இன்னிங்ஸிலும் தேவையற்ற ஷாட்களை ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்தது போதும், அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி, பிரயங்க் பஞ்ச்சலைக் களமிறக்கி சோதிக்கலாம்.
அதேபோல ரஹானேவைக் கழற்றவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். ரிஷப் பந்த் அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பது எக்ஸ்ட்ராஸ் 27 ரன்களதான்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா, அறிமுக வீரர் ஜான்ஸன் தலா 4 விக்கெட்டுகளையும், இங்கிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்கரம், பெட்டர்சன், ரஸ்ஸி வெண்டர் டுசென், கேசவ் மகாராஜ் ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் டீன் எல்கர் அரைசதம் கடந்துள்ளார்.
இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக டீன் எல்கர் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையடுத்து நாளை கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்கள் மீதமுள்ளது.