ஜல்லிக்கட்டு – ஜனவரியில் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ்!
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான உடல் தகுதி சான்றிதழ் வரும் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது.
தை பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கான உடல்தகுதி சான்றிதழ் வழங்கும் முகாம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் காளைகளுக்கான உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 96 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
திமில் உள்ள நாட்டின காளைகளாக இருக்க வேண்டும், மூன்றரை முதல் 8 வயதுடைய காளைகளாக இருக்க வேண்டும், வெளி காயங்கள் இருத்தல் கூடாது, முழு கண் பார்வை திறன் இருக்க வேண்டும், ரத்த சோகை பாதிப்பு, சோர்வுள்ள காளைகளாக இருத்தல் கூடாது உள்ளிட்ட முழு உடல் திறன் குறித்து பரிசோதனை செய்து தகுதியுடைய காளைகளுக்கு மட்டும் உடல்தகுதி சான்று வழங்கப்படும் என கால்நடை துறை தகவல் தெரிவித்துள்ளது.