ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா அச்சத்தில் ஐரோப்பா.
தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.48 கோடியை தாண்டியுள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 24 லட்சத்து 197 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 38 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,433 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்சில் நேற்று முன்தினம் 1,80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில், நேற்று 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார மந்திரி ஆலிவர் வெரன் கூறியதாவது:-
ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது. மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒமைக்ரான் பரவலை அலை எனக்கூறுவதை விட ஆழிப்பேரலையாக உள்ளது என கூறினார்.
பிரான்ஸ் தவிர்த்து, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், சைப்ரஸ், மால்டா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. முன்பு அந்நாட்டில் 2,50,000 பேர் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 2,65,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட நினைத்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவிலும், இதுவரை இல்லாத அளவாக நேற்று 18,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.