சம்பந்தன் – ஹக்கீம் நாளை நேரில் பேச்சு மனோவும் பங்கேற்பார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இரா. சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மு.கா. சார்பிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் மனோ கணேசனும் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், இதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டு ஆவணமொன்றை அனுப்பிவைப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் முயற்சித்தன. இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், சில அரசியல் காரணங்களால் கூட்டு ஆவணத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன. அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நாளை ஹக்கீமை, சம்பந்தன் தரப்பு சந்திக்கவுள்ளது.

முஸ்லிம் தரப்புகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில், தமிழ்க் கட்சிகள் மட்டும் இணைந்து கையொப்பமிடுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.