என்னை விசாரணைக்கு ஏன் அழைத்தோம் எனச் சிந்திக்க வேண்டிவரும்!
என்னை ஏன் விசாரணைக்கு அழைத்தோம் என விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சிந்திக்க வேண்டிவரும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:-
“படம் சும்மா ஓடம்..! இதற்கும், செய்திக்கும் தொடர்பில்லை. கையில் கத்தியுடன் போகும் எண்ணம் எதுவும் இல்லை…!
நேற்றுக் காலை விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு நான் போகவில்லை. “குறைந்த அவகாசம் காரணமாக, நேற்று தவிர்க்க முடியா காரணத்தால், நான் சமூமளிக்க முடியாது. ஜனவரியில் வேறொரு நாள் தாருங்கள்” என ஆணைக்குழுவுக்கு அறிவித்து விட்டேன்.
அடுத்து, இந்த ஆணைக்குழு என்னை அழைத்ததன் காரணம் சரியாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். இது ஊழல் விசாரணை ஆணைகுழு அல்ல.
கடந்த அரசின் போது, அதற்கு முந்தைய மஹிந்த ராஜபக்ச அரச அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை பற்றி விசாரிக்க, அப்போது ஒரு அமைச்சரவை குழு அமைக்கப்பட்டதாகக் கூறி, அது பற்றி விசாரிக்கவே இவர்கள் என்னை அழைக்கின்றார்கள்.
இதற்கு முதல், சட்டமா அதிபரிடம் கூறி வழக்குகளை வாபஸ் வாங்கி, முந்தைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களை, இவர்கள் விடுவித்து விட்டார்கள்.
இது போதாது என்று இப்போது, “இலஞ்ச ஊழலை விசாரித்தவர்களை இவர்கள் விசாரிக்கிறார்களாம்”. எப்படி கதை?
அடுத்த மாதம், நான் அங்கே போனால், நான் தரப்போகும் சாட்சியம் காரணமாக, என்னை ஏன் அழைத்தோம் என யோசிக்கப் போகின்றார்கள்” – என்றுள்ளது.