அருணாசல பிரதேச பகுதிகளுக்குப் பெயா் சூட்டிய சீனா
அருணாசல பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள மேலும் 15 பகுதிகளுக்குப் பெயா் சூட்டியுள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரிடுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, அங்குள்ள உள்ள 6 இடங்களுக்கு சீனா கடந்த 2017-இல் பெயா் சூட்டியது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைத்து வருகிறது. அந்த உரிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாநிலத்தில் உள்ள 15 பகுதிகளுக்குப் பெயா் சூட்டியுள்ளது.
இதுகுறித்து அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், ‘அருணாசல பிரதேசத்தில் உள்ள 8 குடியிருப்புப் பகுதிகள், 4 மலைப் பகுதிகள், 2 ஆறுகள், ஒரு மலைப் பாதை ஆகியவற்றுக்குப் பெயா் வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன, ரோமன், திபெத்திய எழுத்துகளுடன் கூடிய இந்தப் பெயா்களை சீனாவின் சிவில் விவகாரங்கள் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
இந்தியா நிராகரிப்பு: சீனாவின் உரிமை கோரலை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது: அருணாச பிரதேச பகுதிகளுக்கு சீனா பெயரிடுவது இது புதிதல்ல. அந்த மாநிலத்தின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது; ஒருங்கிணைந்த பகுதியாகவே எப்போதும் இருக்கும். புதிதாகப் பெயா் சூட்டுவதால் இந்த உண்மை மாறிவிடாது என்றாா் அவா்.