நாடும் அரசும் மோசமான விளைவுகளைச் சந்திக்கும்! – ரணில் எச்சரிக்கை.

“நாடு பட்டினிச் சாவை நோக்கிச் செல்கின்ற இன்றைய நிலைமையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாட்டின் நலன் கருதி அவசர தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். இல்லையேல் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாடும் அரசும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு அடுப்பு வெடிப்பு, எரிபொருட்களின் விலையேற்றம், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மரக்கறிகளின் விலை உயர்வு எனப் பலதரப்பட்ட பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். ஆனால், அரசோ மக்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.
இந்த அரசின் முட்டாள்தனமான தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்துள்ளது. எந்த நாடும் இலங்கைக்குக் கைகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே ஒரே வழி என அரசிடம் நாம் பல தடவைகள் கூறிவிட்டோம். ஆனால், அரசோ அசமந்தப்போக்கில் செயற்படுகின்றது.
இராணுவத்தின் துணையுடன் ஆட்சியை நடத்திச் செல்லலாம் என்று அரசு கனவு காண்கின்றது. இராணுவத்தைக்கொண்டு வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எப்படி உயர்த்த முடியும்?
இராணுவத்தை முன்னிறுத்தி ஆட்சியை நடத்த அரசு முயன்றால் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்; சர்வதேசமும் கடுமையாக எதிர்க்கும்.
நாடு பட்டினிச் சாவை நோக்கிச் செல்கின்ற இன்றைய நிலைமையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாட்டின் நலன் கருதி அவசர தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். இல்லையேல் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாடும் அரசும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். எமது கருத்துக்களை அரசியல் ரீதியில் அரசு பார்க்கக்கூடாது. நாட்டின் நலன் கருதி அரசு முடிவு எடுக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும் பேராபத்து மிக்கதாகவே அமையும்” – என்றார்.