சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தினை பயன்படுத்துவது தொடர்பான இழுபறி நிலைக்கு விரைவில் இறுதித் தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கலந்துரையாடல் (29) நடைபெற்றது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு பாதிப்புக்கள் அற்ற நிறைவான போக்குவத்து சேவை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் மத்தியில் புரிந்துணர்வுடனான சேவை ஏற்படுத்துவதே இன்றைய கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தின்போது, யாழ் மாவட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளை இணைந்த நேர அட்டவணையில் மேற்கொள்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தினை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுத்தவது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், குறித்த விடயங்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர்களுடன் கலந்துரையாடி விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.