பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்…

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்றை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.
குறித்த செயலியைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் தகவல் வழங்க முடியும்.
இதேவேளை, புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச வயதெல்லை அடுத்த வருடத்தில் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தை 2022ம் ஆண்டு திருத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், குறித்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.