இலங்கை பிரதமரின் புதுவருட வாழ்த்துச் செய்தி.
அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம்.
உலகளாவிய தொற்று நிலைமைக்கு முகங்கொடுத்து கடந்த ஆண்டில் இலங்கை முகங்கொடுத்த சவால்கள் பலவாகும். சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றிய அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் பாதுகாப்பிற்காகவே கடந்த ஆண்டில் முன்னுரிமை வழங்கியிருந்தோம். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக செயற்படுத்தியதன் ஊடாக உங்கள் அன்பிற்குரியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கான நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க எமக்கு முடிந்தது.
நாட்டில் இவ்வாறான எவ்வித சவால்களும் காணப்படாத காலப்பகுதியில் கைவிடப்பட்ட பல திட்டங்களை நாம் செயற்படுத்தி அவற்றை கடந்த காலங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக கையளித்துள்ளோம்.
தொற்று நிலைமைக்கு மத்தியிலும் அந்த எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் இடைநிறுத்தாது, மக்களின் வாழ்க்கை நிலையை கட்டியெழுப்பி அபிவிருத்தி ஒளியை முழு நாட்டிற்கும் பரப்புவதே எமது அரசாங்கத்தின் எதிர்கால இலட்சியமாகும். அதற்காக சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக எம்மத்தியில் காணப்படும் பல்வேறு தடைகளை முறியடிக்க வேண்டும். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சரியானதை தெரிவுசெய்து அதற்காக செயற்படுவதன் ஊடாக தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.
நாம் நாட்டின் பிரச்சனைகளை விமர்சிப்பவர்கள் அல்ல நடைமுறைச் சவால்களுக்கான தீர்வுகளை உங்களுக்கு வழங்குபவர்கள். அதற்காக நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் புதிய பாதை இன்று உதயமாகும் புத்தாண்டில் வெளிப்படுத்தப்படும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடைகளை முறியடித்து வாழ்வை வெல்லும் ஆண்டாக இப்புத்தாண்டை உருவாக்குவோம். அதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கு பலமாக விளங்குவதற்கு உறுதியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதை நான் நம்பிக்கையும் தெரிவிக்கின்றேன்.
இப்புத்தாண்டில் இலங்கை மக்கள் அனைவரதும் புதிய எதிர்பார்ப்புகளும் பிரார்த்தனைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்.