புத்தாண்டு கொண்டாட்டம் தடை : சென்னை முழுவதும் 13 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.. வெறிச்சோடிய சாலைகள்
புத்தாண்டு கொண்டாட்டம் தடை காரணமாக சென்னை முழுவதும் 13 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 449 வாகன தணிக்கை மையங்கள், நடமாடும் சிசிடிவி கேமாராக்களுடன் தீவிர கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை காவல்துறை தடை விதித்தது. குறிப்பாக மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, நீலாங்கரை கடற்கரை போன்ற கடற்பரப்புகளில் பொதுமக்கள் கூடக்கூடாது என சென்னை காவல்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை தீவிரமாக கடைபிடிக்க ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள் தலைமையில் 13 ஆயிரம் போலீசார் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மது குடித்து வாகனம் ஓட்டுவது மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.
அப்படி கைது செய்யப்படும் நபர்களை இரவில் தங்கவைப்பதற்கு திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னை முழுவதும் 59 சிறப்பு வாகன தணிக்கை மையங்கள் உட்பட 449 வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
குறிப்பாக கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை. ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகள் முற்றிலுமாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு இரவு 9 மணியிலிருந்து பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது.
அதேபோல ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் சாலைகளிலுள்ள ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பதற்காக சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
சென்னை சாலைகளை கண்காணிக்க நடமாடும் சிசிடிவி மற்றும் நடமாடும் வாகன எண் அடையாளம் காணும் சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக சென்னையில் இரவு 12 மணிக்குமேல் அத்தியாவசிய போக்குவரத்து வாகனங்களை தவிர மற்ற தனிநபர் போக்குவரத்துக்கும் சென்னை காவல்துறை தடை விதித்திருந்ததால் சென்னை சாலைகள் முழுவதும் ஆள் அரவமற்று காட்சியளித்தது.