ஒமிக்ரான் பரவல் வேகம் அதிகரித்துள்ளது: வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைக் கண்காணிக்க குழு- மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தீவிரமாக கவனிக்க தனிக்குழுவை அமைக்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய கொரோனா வைரஸின் மற்றொரு திரிபான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. ஐரோப்பிய நாடுகள் ஒமிக்ரான் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவல் 1,500-யைக் கடந்துள்ளது. அதனால், மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இந்தநிலையில், கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை தீவிரமாக கவனிக்க தனிக்குழுவை அமைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவிவரும் வேகம், கடந்த 70 நாட்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இந்தியாவிலும் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவுவதை காட்டுகிறது.
இதனால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தீவிர கண்காணிப்புடன் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தால் அதற்கு சிகிச்சைக்காகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாகவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைத் தீவிரமாக கண்காணிக்க தனிக்குழுவை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.