மகர விளக்கு பூஜை: சபரிமலையில் நாள்தோறும் கூடுதலாக 1 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எருமேலி பெருவழிப் பாதையில் பக்தர்கள் நேரக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மகரவிளக்கு பூஜையையொட்டி, பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
கோயில் பிரகாரம் முழுவதும் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இரு முடி சுமந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் தினமும் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் நிலையில், நேற்றிரவு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி இரவு 11 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10.55 மணியளவில் ஹரிவராசனம் பாடி 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
மகரவிளக்கு பூஜை ஜனவரி 19-ம் தேதி நிறைவடைய உள்ளது. அதுவரை தினமும் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
எருமேலி கோழிக்கல் கடவு பகுதியில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.