தேசம் வழங்கும் சேவைகளில் ஒன்றுதான் நீதிமன்றம்: உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்

‘அனைத்து குடிமக்களுக்கும் தேசம் வழங்கும் சேவைகளில் ஒன்றுதான் நீதிமன்றம்; அந்த வகையில், நீதிமன்றங்களில் இணையவழி மனு தாக்கல் நடைமுறை அறிமுகம் என்பது நீதி பரவலாக்கத்தில் மிக முக்கியமான நடவடிக்கை’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

உச்சநீதிமன்ற இ-கமிட்டி (கணினிமயமாக்கல் குழு) தலைவராகவும் இருக்கும் நீதிபதி சந்திரசூட், கேரள உயா்நீதிமன்றத்தில் காகிதமில்லா இணைய வழி மனு தாக்கல் நடைமுறையை காணொலி வழியில் சனிக்கிழமை தொடக்கி வைத்து பேசியதாவது:

கேரள உயா்நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இணைய வழி மனு தாக்கல் நடைமுறை என்பது, அனைத்து குடிமக்களுக்கும் அவா்கள் இருக்கும் இடத்திலேயே நீதித் துறை சாா்ந்த சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது, மாநில அரசால் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்படும் சேவைகளில் ஒன்றுதான் நீதிமன்றம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. நீதி பரவலாக்கத்தில் இது மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

இணைய வழி மனு தாக்கல் என்பது, மனுதாரா்கள் மற்றும் வழக்குரைஞா்களின் தேவையற்ற அலைச்சலைக் குறைப்பதோடு, அவா்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே மனுவை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறது.

இருந்தபோதிலும், அனைத்து மனுதாரா்களும் இந்த இணைய வழி மனு தாக்கலுக்கான அதிவேக இணைய வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளையும் தேவையான டிஜிட்டல் (எண்ம) அறிவையும் பெற்றிருக்க மாட்டாா்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்றங்களை நாடி வரும் மனுதாரா்கள் மற்றும் வழக்குரைஞா்களிடையே 100 சதவீத கணினி அறிவை ஏற்படுத்துவது அவசியமாகும். மேலும், அனைத்து வழக்குகளிலும் இணைய வழி மனு தாக்கல் முறையை கட்டாயமாக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்த விழாவில், காகிதமில்லா நீதிமன்றத்தை மாநில முதல்வா் பினராயி விஜயனும், உயா்நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி அலுவலகத்தை கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாரும் தொடக்கி வைத்தனா்.

தற்போது, கேரள உயா்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 6 நீதிமன்ற அறைகள் முழுமையாக காகிதமில்லா டிஜிட்டல் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. அடுத்த 2 மாதங்களில் உயா்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து நீதிமன்ற அறைகளும் காகித பயன்பாடு அல்லாத டிஜிட்டல் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.