பாடமெடுக்க தயாராகும் தனுஷ்..! ‘வாத்தி’ பட புதிய அப்டேட்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதால் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.