படுகொலையான இளைஞருக்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று (03) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பரந்தன் சந்தியில் புத்தாண்டு தினத்தில் குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய 13ஆம் ஒழுங்கை, முல்லைவீதி, பரந்தன் என்னும் முகவரியுடைய இளைஞர் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்திப் படுகொலை செய்ததோடு மேலுமொருவர் படுகாயமடைந்தார்.
போத்தலால் குத்தியதால் குறித்த இளைஞர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் இதுவரை எவருமே கைதுசெய்யப்படவில்லை என உறவுகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியை நாளை இடம்பெறவுள்ளது. நாளை காலையே வைத்தியசாலையில் இருந்தும் உடல் வீட்டுக்கு எடுத்துவரப்படவுள்ளது. இதன்போது பரந்தன் சந்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டியும், கொலையுடன் தொடர்புபட்டோரைக் கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் சந்தி வர்த்தக நிலையங்களும் நாளை துக்கத்தை வெளிப்படுத்தி கதவடைப்பை முன்னெடுக்கவுள்ளன.