பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளாத நபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடைவிதித்து அந்த நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கும் வரும் என அந்த நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
எனினும் தடுப்பூசி பெறுவதில் இருந்து மருத்துவ ரீதியாக விலக்கு பெற்றவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படமாட்டர்கள் என்றும் குடிமக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 90 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி (2 டோஸ்) பெற்றுள்ளனர் என்றும், கடந்த மாதம் 24-ந்தேதி வரையில் 34 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.